தமிழகத்திலிருந்து காசி, வாரணாசி, அயோத்தியா ஆகிய இடங்களுக்கு 9 நாட்கள் சுற்றுலா செல்ல சிறப்பு ரயில் சேவை தென் மண்டல பொது மேலாளர் அறிவிப்பு.
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காக புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் ஆன்மிக தளங்களுக்கு பிரத்தியேக ரயில் சேவை வசதியை தென்னக ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
undefined
ஜூன் மாதம் 6ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி, வாரணாசி திரிவேணி சங்கமம், கயா மற்றும் அயோத்தியா ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுலா பயணமாக செல்கிறது.
பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலில் ஒன்பது நாட்கள் சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு 18 ஆயிரத்து 550 ரூபாய், மற்றும் 5-11 வயது குழந்தைகளுக்கு 17,560 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முழுவதும் படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள் அமைக்கப்பட்ட இந்த ரயிலில் 500 பேர் வரை பயணம் செய்யலாம் எனவும் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை பத்து இடங்களில் பயணிகள் ஏறுவதற்காக ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பயணிகளுக்கு மூன்று நேர தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரில் சுற்றிப் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதி மற்றும் தங்கும் இடம் அனைத்தும் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும், தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்க விரும்புவோர் ஐஆர்சிடிசி என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தென் மண்டல பொதுக்குழு மேலாளர் ராஜலிங்கம் வாசு தெரிவித்துள்ளார்.