தஞ்சையில் அரசுப்பள்ளி அருகே அமைச்சர் அன்பில் மகேஸ் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பள்ளியில் ஆட்டம் போட்ட சம்பவத்தால் ஆசிரியர்கள் வேதனை அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார். மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் ஆண்டு தேர்வினை எழுதி வருகின்றனர். அந்த சமயத்தின் போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க பிரச்சாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபட்டதால் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.
இதனால் மாணவர்கள் சரியாக தேர்வு எழுதவில்லை எனவும் ஆசிரியர்கள் ஒரு சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளி அருகே பிரச்சாரம் நடைபெற்றதால் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டாமல் பேண்ட் வாத்தியத்தை கேட்டு நடனமாடி கொண்டிருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே பள்ளிக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு அருகாமையில் பிரச்சாரம் நடத்தியதால் பிளக்ஸ் பேனர்கள் வைத்து பள்ளியை மறைத்த வண்ணம் இரண்டு இளைஞர்கள் கொண்டு சென்ற சம்பவமும் நடந்தது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் கட்சி சார்ந்த பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவை வைத்து உபயோகப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. என்னதான் தேர்தல் பிரச்சாரமாக, இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதி 100% வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கும் கல்வித் துறை அமைச்சரே கவனமாக இருக்க வேண்டாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.