2,381 அரசு பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்று தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு கேடயங்களும் - சான்றிதழ்களும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சீனியர் அடிப்படையில் வழங்குவதா இல்லை மெரிட் அடிப்படையில் வழங்குவதா என நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதற்காக பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை என்று கூறமுடியாது. அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி பள்ளிகள் இயக்கப்படுகிறது.
மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் 2,381 அரசு பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளனர் என்றார். மேலும், அரசு பள்ளிகளில் நன்கொடை வாங்க கூடாது, மீறி வாங்கும் பள்ளிகளில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்தார்.