தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் சவுந்தர்ராஜ்(42) மற்றும் பாலகுரு(43). இவர்கள் இருவரும் நேற்று மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆத்தங்கரையின் படித்துறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் சவுந்தர்ராஜ்(42) மற்றும் பாலகுரு(43). இவர்கள் இருவரும் நேற்று மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆத்தங்கரையின் படித்துறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். சானிடைசர் கலந்து குடிப்பதை பார்த்த ஒருவர் சானிடைசர் குடித்தால் இறந்து விடுவாய் என எச்சரித்தும் குடித்துள்ளனர்.
இன்று காலை பொதுமக்கள் காவிரி படித்துறை வழியாக சென்ற போது இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் மது குடித்ததால் இறந்தனரா? மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததனால் உயிரிழந்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.