காரைக்குடியில் பிரபல வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் தங்க நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பிள்ளையார்பட்டி, சிறாவயல், சிறுகூடல்பட்டி, துளாவூர், குன்றக்குடி, நேமம், வைரவன்பட்டி, மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தங்களது அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்றனர்.
இந்நிலையில் நகைக் கடன் வாங்கியவர்களில் சிலர் அசல், வட்டியை முழுமையாக செலுத்தி நகைகளை திருப்பினர். அப்போது அடகு வைத்தபோது இருந்ததை விட நகையின் எடை குறைவாக இருப்பதாகவும், நகைகள் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு காணப்படுவதாகவும் அடகு வைத்த போது பெரிய செயினாக இருந்தது. அதனை மீட்கும் போது சிறிய செயினாக மாறி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அடகு வைத்த கை செயின் விரல் செயினாக மாறி விட்டதாக கூறி கடந்த மாதம் 21ம் தேதி வங்கியில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதை வீடியோவாக எடுத்தனர். இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகளின் தொடர் விசாரணையில் அடகு நகை மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனை அடுத்து சிவகங்கை குற்றப்பிரிவில் தற்போது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பணி மாறுதலில் வங்கி மேலாளர் கொடுத்த புகாரில் விசாரணை நடந்து வந்தது.
தொடர்ந்து வங்கி உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வங்கியில் நகை அடகு வைத்த 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையார்களில் தினமும் குறிப்பிட்ட நபர்களை வரவழைத்து நகைகள் அவர்கள் முன்பு பிரித்துப் பார்த்து சோதனை செய்தனர். இதில் பல நபர்களின் நகைகள் வெட்டப்பட்டும், ஒடப்பட்டும் இருப்பதும், குறிப்பாக படிப்பறிவு இல்லாத ஏழை, எளிய பாமர மக்களின் அடகு நகைகளில் மட்டும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சிவகங்கையில் தைலமர காட்டுக்குள் வெட்டி சிதைக்கப்பட்ட 2 உயிர்கள்; அண்ணன் தம்பி படுகொலை
வங்கியில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நகைகள் ஆய்வு செய்ததில் 80க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் அடகு நகைகளில் மோசடி நடந்துள்ளது. தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. தினமும் நடைபெறும் அடகு நகை ஆய்வில், வாடிக்கையாளர்கள் புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலும் வங்கியில் நகைகள் மோசடி நடைபெற்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் வங்கிக்கு வருகை தந்து பல மணி நேரம் காத்திருந்து தங்களது அடகு நகைகளை முழு பணத்தையும் செலுத்தி திருப்பியும் வருகின்றனர். திருப்ப முடியாத வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தங்கள் நகைகள் பத்திரமாக உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக வங்கியில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தற்போது தொடர்ந்து வாடிக்கையாளர் முன்பு வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கியில் 7 வருடங்களுக்கும் மேலாக நகை மதிப்பீட்டாளராக பணி புரிந்து வரும் நாராயணகுமார் மீது மேலாளர் சரத்குமார் அளித்த புகாரில் சுமார் 167 கிராம் தங்க நகைகள் மோசடி செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு 11 லட்சத்து 13 ஆயிரம் என நகை மதிப்பீட்டாளர் மீது மட்டும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வங்கியில் 80க்கும் மேற்பட்ட நபர்களிடம் கிலோ கணக்கில் அடகு நகை மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது மட்டும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளது நகை மோசடி குறித்து புகார் தெரிவித்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய முறையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அடகு நகை மோசடி வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.