
சமத்துவம் பேசும் மண்ணில், அரசுப் பணியில் இருக்கும் ஒரு பெண்ணிற்கே சாதிய ரீதியான ஒடுக்குமுறையும், அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக நீதி குறித்தப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தல் பணியில் இருந்த ஒரு பெண் ஊழியரை, அரசியல் பலம் கொண்ட கும்பல் சாதிய ரீதியாக இழிவுபடுத்திய சம்பவம், தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அரசியல் அதிகார மிரட்டலும்... சாதிய வன்கொடுமையும்!
திருப்புவனம் பேரூராட்சியில் தற்காலிக கணினி ஊழியராகப் பணியாற்றி வருபவர் கலாரஞ்சனி. பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் (தாமாக) கட்சியின் மாநிலத் தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி மற்றும் நகரச் செயலாளர் பாரதிராஜா ஆகிய இருவரும் இவரைச் சாதிய ரீதியாக மிக இழிவாகப் பேசியுள்ளனர்.
அரசுப் பணியில் இருக்கும் ஒரு பெண்ணைச் சாதிப் பெயரைச் சொல்லிப் பொது இடத்தில் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. அதிகார மிரட்டல் மற்றும் சாதியத் திமிர் கொண்டு ஆடிய இந்த அரசியல் புள்ளிகளின் செயல், ஒரு நேர்மையான ஊழியரை மனரீதியாக நிலைகுலையச் செய்துள்ளது.
குற்றவாளிகளைக் காக்கும் காவல்துறை?
பாதிக்கப்பட்ட கலாரஞ்சனி இது குறித்துப் புகார் அளித்தபோது, வழக்கைப் பதிவு செய்த மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி), அதை முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, அடிப்படை முகாந்திரம் இருந்தும் வழக்கை அவசர அவசரமாக முடித்து வைத்துள்ளது காவல்துறை.
நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் இந்த நிழல் ஆட்டம் அம்பலமானது. "உண்மைகளை மறைத்து வழக்கை முடித்து வைத்தது தவறு" என நீதிபதி விஜயகுமார் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார். ஒரு பெண் ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளே, குற்றவாளிகளுக்குக் குடைபிடிப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
நீதிமன்றத்தின் அதிரடி
இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிபதி, மானாமதுரை டி.எஸ்.பி-யை நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளது. இது அந்த அதிகாரிக்கு விடுக்கப்பட்ட ஒரு பலமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும். ஏப்ரல் 1, 2026-க்குள் விரிவான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மானாமதுரை டிஎஸ்பி இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரித்து, அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.காவல்துறையின் விசாரணையில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி, நீதிபதி வைத்த குட்டு சிவகங்கை மாவட்டக் காவல்துறையைத் தலைகுனிய வைத்துள்ளது.
அரசியல் செல்வாக்கு இருந்தால் எதையும் செய்யலாம், யாரையும் சாதி சொல்லி இழிவுபடுத்தலாம் என்ற நினைப்பில் ஆடுபவர்களுக்கு, இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு சவுக்கடி. தேர்தல் பணியில் இருந்த ஒரு பெண்ணிற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள், இன்று நீதிமன்றக் கூண்டில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மானாமதுரை டி.எஸ்.பி தாக்கல் செய்யப்போகும் அறிக்கை உண்மையானதாக இருக்குமா? அல்லது மீண்டும் ஒருமுறை அதிகார வர்க்கத்திற்குச் சாதகமாக அமையுமா? என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.