இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய சரக்கு வேன்..! தூக்கி வீசப்பட்டு இருவர் பரிதாப பலி..!

By Manikandan S R S  |  First Published Oct 10, 2019, 12:42 PM IST

சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சரக்கு வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இருக்கிறது ஆலந்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். வயது 27. தறித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதில் 3 வயதுடைய சிறுவன் பரணிதரனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் நேற்று அதிகாலை காய்ச்சல் அதிகரித்த காரணத்தால் பரணிதரனை சேலம் அருகே இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க சாந்தகுமார் முடிவெடுத்திருக்கிறார். அதற்காக அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பரான முருகன் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மகனுடன் சேலத்திற்கு சென்றுள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் சங்ககிரி அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. அதை ஓட்டுநர் பிரபு(27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சாந்தகுமாரும் முருகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் பரணிதரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பிரபு அங்கிருந்து இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக சென்றவர்கள் குழந்தை பரணிதரனை உடனடியாக மீட்டனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி காவல்துறையினர் சாந்தகுமார் மற்றும் முருகன் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் பரணிதரனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சரக்கு வேன் ஓட்டுநர் பிரபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!