பிரதமர் மோடி இன்று காலை திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பிறகு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ராமர் தொடங்கி அயோத்தியை ஆண்ட பல்வேறு மன்னர்களும் ஸ்ரீரங்கம் கோயிலைதான் குலதெய்வமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல ராமாயணத்துடன் ராமேஸ்வரம் கோயிலும் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இந்த இரண்டு தலங்களுக்கும் பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார். பிறகு பிரதமர் மோடி, தமிழர்களின் பாரமரிய வேட்டி சட்டை அணிந்தபடி ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார். ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்து வந்த நிலையில் புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் கம்பராமாயணத்தை பாராயணம் செய்ய அதனை அமர்ந்து கேட்டார். ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்புவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். வரும் வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர்.
ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தகிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண கதாவில் கலந்து கொண்டார். பிரதமர் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அரிச்சல் முனை கடலில் புனித நீராடுவதால் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தியகடற்படை, கடலோர காவல் படை, மெரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.