ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களாக இருக்கக்கூடிய தனுஷ்கோடி, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோயில், ராமர் பாதம், அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தப் பின்னர், பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடல் அலையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைப் பாலத்தின் இரு புறங்களின் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் நேர்ந்து வருகிறது.
undefined
இந்நிலையில்,ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்ததில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க;- பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. தடுப்பு மீது ஏறி கடலுக்குள் விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு
இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாம்பன் பாலத்தில் நிகழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு பேருந்துகளும், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களும் வரிசையில் காத்திருந்தன. இந்த சம்பவம் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிகாலை மழை பெய்து பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததன் காரணமாக, பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இதேபோன்று பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்பு மீது மோதி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.