புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த சிறுவனின் மூக்கில் குட்டி மீன் ஒன்று சிக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இருக்கிறது மண்ணவேளாம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார். 13 வயது சிறுவனான இவர், அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கிணறு ஒன்று இருக்கிறது. தினமும் தனது நண்பர்களுடன் அருள்குமார் அங்கு சென்று குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்றும் அருள்குமார் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நண்பர்களுடன் கிணற்றின் மேலிருந்து குதித்து குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் மூக்கில் ஜிலேபி மீன் ஒன்று புகுந்தது. இதனால் சிறுவன் வலிதாங்காமல் கதறி துடித்தான். அங்கிருந்தவர்கள் மீனை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது பலனளிக்காததால் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் மூக்கில் மீன் உயிருடன் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் மருத்துவ பணியாளர்களின் உதவியுடன் சிறுவனின் மூக்கில் சிக்கிய மீனை வெளியே எடுத்தனர். அதன்பிறகு சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவனின் மூக்கில் சிக்கியிருந்த மீனை வெளியே எடுப்பதில் சிரமம் இருந்ததாகவும் ஆனாலும் வெற்றிகரமாக வெளியே எடுத்ததாக மருத்துவர் கதிர்வேல் கூறியிருக்கிறார்.