கிருஷ்ணகிரி எருதுவிடும் திருவிழா; ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்த 300 காளைகள்

By Velmurugan sFirst Published Feb 15, 2023, 4:17 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் தானம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, திருப்பத்தூர், வேலூர், ஆலங்காயம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழக அரசின் நிபந்தனைகள் படி காளைகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இருபுறமும் தடுப்புகள் அமைத்தும், அதன் நடுவே வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. குறைந்த நேரத்தில் 120 மீட்டர் தூரம் கடந்து சென்று இலக்கை எட்டும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான வீரர்கள், இணைந்து காளைகளை தழுவி வீர விளையாட்டை விளையாடினர். இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு மகிழ்ந்தனர். குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய், என 50 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு துவங்கிய எருது விழா மாலை 3 மணி வரையிலும் நடைபெற்றது.

தமிழக அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவத் துறை, சார்ந்த அதிகாரிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

click me!