ஓசூர் ஒன்றியத்தில் பதிவான 99 தபால் ஓட்டுகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாளுக்குள்ளாக தேர்தல் பணியாளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலமாக அளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளில் முதலில் தபால் ஓட்டுகள் தான் எண்ணப்படும். அதன்படி இன்று காலையில் அனைத்து இடங்களிலும் பதிவான தபால் ஓட்டு பெட்டிகளின் சீல்கள் முதலில் உடைக்கப்பட்டு அரசு ஊழியர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பல வாக்குகள் செல்லாதவையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ஓசூரில் பதிவான அனைத்து தபால் வாக்குகளும் தள்ளுபடியாகியிருக்கிறது. ஓசூர் ஒன்றியத்தில் தபால் ஓட்டுகள் 99 பதிவாகியிருந்தன. இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அனைத்து தபால் வாக்குகளும் செல்லாதவை என தேர்தல் அதிகாரி ஆப்தாப் பேகம் அறிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் பதிவான 99 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே போல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 96 தபால் வாக்குகளும், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் 85 தபால் வாக்குகளும், ஒட்டன்சத்திரத்தில் 73 தபால் வாக்குகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.