கரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பல நலத்திட்ட பணிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல இயக்கங்கள் சார்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இயற்கையை பாதுகாத்தல், மரம் நடுதல் போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரம் நடுவதில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் தனது உரைகளில் பலமுறை குறிப்பிட்டுள்ளார். பதவி காலத்திலும் அதற்கு பின்பும் அவரே நேரடியாக இந்த பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். அவரது மறைவிற்கு பிறகு அப்துல் காலம் பெயரில் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு மரம் நடுதல் போன்ற பல நலத்திட்ட பணிகளில் இளைஞர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் அப்துல் கலாம் வழியை பின்பற்றி பல திட்டங்களை போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.ஆர். விஜய பாஸ்கரின் தலைமையில் சமூக ஆர்வலர்கள் நடைமுறை படுத்தி வருகின்றனர். அதன் ஒருகட்டமாக கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்குவதற்காக 'கானகத்தினுள் கரூர்' என்கிற புதிய முயற்சியை தற்போது தொடங்கி இருக்கின்றனர்.
இந்த திட்டத்தின்படி கரூர் மட்டுமில்லாது மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட இருக்கிறது. இதன் தொடக்க விழா காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட பணியை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகள் நட்டனர்.
கரூர் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 'கானகத்தினுள் கரூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் நடப்படுவதோடு மட்டுமில்லாது அதை சுற்றி வலை அமைக்கப்பட்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவரே நேரில் களத்தில் இறங்கி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு ஆட்களை அனுப்பி அங்குள்ள நர்சரி கார்டன்களில் இருந்து நன்கு வளர்ந்த மரம் போன்ற செடிகளை தேர்வு செய்து பல லாரிகளில் ஏற்றி கொண்டு வந்து பெரும்பாலும் மரங்களாகவே நட்டு வருவது தான் இங்கு ஹைலைட். மரம் வளர்ப்பு, ரத்த வங்கி, கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பட்ஜெட் தொகை செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி கூறிய கரூர் சமூக ஆர்வலர்கள் சிலர், அடுத்த சில ஆண்டுகளில் கரூர் மாவட்டம் தமிழகத்தில் பசுமை மிகுந்த மாவட்டமாக உருவெடுக்கும் முயற்சியின் தொடக்கம் தான் மரம் நடும் பணிகள் என்றனர். இதுமட்டுமிலாது கரூர் பகுதியில் ரத்த தானம், ஏழைக்குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது போன்று பல நலத்திட்ட பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதன்மூலம் பலர் பயன்பெற்றிருக்கும் நிலையில் இன்னும் பெரிய அளவில் பணிகளை செய்ய இருப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.