ஈரோட்டில் உடற்பயிற்சிக்காக காலை நேரத்தில் கால் பந்து விளையாடிய நபர் மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்த நிலையில், பரிதாபமாக அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் சுப்ரமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பத்திரம் எழுதும் வேலை செய்து வரும் சுப்ரமணி, தினமும் வீட்டின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கால்பந்து விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் மைதானத்திற்கு சென்ற அவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
கோவை தனியார் மருத்துவமனையில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம்; துணைத்தலைவர் உள்பட 8 பேர் கைது
அப்போது திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதனையடுத்து சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுயநினைவின்றி இருந்த சுப்ரமணியை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துறைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சுப்பிரமணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்ரமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சக கால்பந்து வீரர்கள் மற்றும் சுப்ரமணியின் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.