ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார்.
தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்படும் போதும், அதனை பொருட்படுத்தாத மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். மக்களோடு மக்களாக நின்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வாக்கினை பதிவு செய்தார். ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.