அந்தியூர்-பர்கூர் சாலை அருகே வந்த போது நடக்க முடியாமல் போகவே சாலையோரம் இருந்த மதகில் சாய்ந்திருக்கிறார். அப்போது தள்ளாடிய அவர் சாக்கடையில் தவறி விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசர், வெகு நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருக்கிறது ஆதிரெட்டியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசர். ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சம்பவத்தன்றும் மதுபான கடைக்கு சென்று குடித்திருக்கிறார். மதுபோதையுடன் தள்ளாடியபடியே வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அந்தியூர்-பர்கூர் சாலை அருகே வந்த போது நடக்க முடியாமல் போகவே சாலையோரம் இருந்த மதகில் சாய்ந்திருக்கிறார். அப்போது தள்ளாடிய அவர் சாக்கடையில் தவறி விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசர், வெகு நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அவர் சாக்கடையில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. அதனால் சாக்கடையிலேயே உயிரிழந்தார். அதன்பிறகும் சாக்கடையில் சடலம் கிடந்ததை யாரும் கவனிக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு சாக்கடையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் பார்த்த போது திருநாவுக்கரசர் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் தான் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி இருந்தது. அதுகுறித்து மேற்கொண்டும் விசாரணை நடந்து வருகிறது.