திருப்பதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை சந்திப்பதற்காக சென்னை வந்த அவரது மனைவி பூங்கொடி கார் விபத்தில் சிக்கியது. இதில், லேசான காயங்களுடன் பூங்கொடி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்பதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை சந்திப்பதற்காக சென்னை வந்த அவரது மனைவி பூங்கொடி கார் விபத்தில் சிக்கியது. இதில், லேசான காயங்களுடன் பூங்கொடி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 4 மாதங்கள் ஆகிய நிலையில், அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கடந்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் போலீசார் கூறியிருந்தனர்.
இந்நிலையில், 140 நாட்களுக்குப் பிறகு நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முகிலனை நேற்றிரவு ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், முகிலனுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 1.30-க்கு முகிலனை அழைத்துக்கொண்டு சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை புறப்பட்டனர். தற்போது சென்னையில் சிபிசிஐடி காவல்துறையினர் முகிலனை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகிலனை காண அவரது மனைவி பூங்கொடி, ஈரோடு சென்னிமலையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். அவர் வந்த காரின் டயர் கள்ளக்குறிச்சி அருகே திடீரென வெடித்தது. இதனால் கார் விபத்துக்குள்ளானது. இதில் பூங்கொடி லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் வேறொரு காரில் சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.