
பழனியில் நாள் ஒன்றுக்கு தொடர்ந்து 20 மணி நேரம் அரசு பேருந்து இயக்கச் சொல்லி வற்புறுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுனர் வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜ்குமார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் எல்பிஎஃப் தொழிற்சங்கத்தில் சங்கத்தின் தேர்தல் நடைபெற்ற போது, இரு பிரிவாக திமுகவிலேயே செயல்பட்டுள்ளனர். அப்போது, ராஜ் குமார் ஒரு பிரிவிலும், சதானந்தம் என்பவர் மற்றொரு பிரிவிலும் இருந்துள்ளனர். இதில், ராஜ்குமார் இருந்த அணி தோல்வியடைந்துள்ளது.
இதையடுத்து, ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கத்துடன் சேலம் அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த அவரை, பழனியில் இருந்து திருப்பூர், அவிநாசி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் பணி அமர்த்துமாறு கிளை மேலாளர் கார்த்திகேயனுக்கு சதானந்தம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார்.
அதன்படி, கிளை மேலாளர் கார்த்திகேயன் என்பவர் ராஜ்குமாரை மேட்டுப்பாளையம் பேருந்துக்கு மாற்றியுள்ளார். அந்த பேருந்து புதிய வழித்தடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தினமும் ஒரு ஒட்டுநர் பணிக்கு சென்று வந்துள்ளனர்.
பணம் தராவிட்டால் இலவச மின்சாரம் கிடையாது; அதிகாரிகளின் அடாவடி தனத்தால் கதி கலங்கும் நெசவாளர்கள்
அதாவது காலை இரண்டு முப்பதுக்கு பழனி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி மேட்டுப்பாளையம் செல்ல நான்கரை மணி நேரம் ஆகிறது. பின்பு பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் பழனியை நோக்கி நான்கு அரை மணி நேரத்தில் திரும்ப வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை சென்று வந்தால் இரவு 10 மணிக்கு பழனி வந்து சேரும்.
எனவே, உறக்கமே வெறும் நான்கு மணி நேரம்தான் என்பதால், தனக்கு மாற்று பேருந்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கிளை மேலாளர் கார்த்திகேயனிடம் ராஜ்குமார் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு கிளை மேலாளர் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளில் பேசியதாக ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மனமுடைந்த ராஜ்குமார், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிச்சுமை அழுத்தம் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.