பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழாவும் ஒன்றாகும். வைகாசி மாத்தில் வரக்கூடிய விசாரகம் நட்சத்திரத்தில் தான் முருகன் அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இத்திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 16ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.
undefined
10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய் கிழமை நடைபெற்றது. இதில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சோடஷ திரவிய பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷ தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கலசபூஜை, வாத்யபூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு பச்சை சாத்துப்படி, பட்டு சாத்துபடி நடத்தப்பட்டு சங்கல்பம் நடைபெற்றது. மேள தாளம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியன வழங்கப்பட்டன. ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது. திருகல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கழந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு பழனியில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.