திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் வெடி விபத்தில் 20 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி மங்கம்மா சாலை அருகே தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் தார்பாயினால் செட் அமைத்து அரசு அனுமதியின்றி பேப்பர் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மங்கம்மா சாலையைச் சேர்ந்தவர்கள் ராஜா (வயது 28) கருப்பையா (25) ஆகிய இருவரும் இணைந்து பேப்பர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பேப்பர் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாற்றுத் திறனாளியின் பஞ்சர் கடையில் கம்பிரசர் வெடித்து திடீர் விபத்து; 4 பேர் படுகாயம்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியின்றி பட்டாசு வெடி தயாரித்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.