தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது என அறிவுறுத்தி இருக்கும் மாவட்ட நிர்வாகம் மீறுபவர்கள் மீது 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களில் ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் தூய்மை பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகளை ஆட்சியர் மலர்விழி துரிதப்படுத்தியுள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கபடுகிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதி அட்டையை பயன்படுத்தி வெளிவர முடியும்.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்கு செல்வதற்கு தொழிற்சாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது என அறிவுறுத்தி இருக்கும் மாவட்ட நிர்வாகம் மீறுபவர்கள் மீது 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது வரை 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் பாதிப்பு குறைவான மாவட்டமாக தர்மபுரி விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.