திருமாவளவன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராவது அவருக்கு பெருமையல்ல, திருமாவளவனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பெறுவது சிதம்பரம் தொகுதி மக்களுக்கு பெருமை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தொகுதிக்கு உட்ட கடலூரில் திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணிக் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், ஐய்யபன், ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
undefined
பாசிச சக்திகளால் ரேட் வைக்க முடியாத ஒரே தலைவர்
முதலாவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரவு முழுவதும் காத்திருந்த கூட்டணி கட்சியினருக்கு திருமாவளவனின் வெற்றி மானப்பிரச்சனை. சாதியின் பெயரில் எதிரிகள் சண்டையை தூண்டுவார்கள். மதமும், சாதியும் ஒன்றுக்கூடி வீழ்த்த நினைத்தாலும் நாம் இந்த தேர்தலின் இலக்காக திருமாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். செம்மண் பூமியில் இருந்து அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். தேசிய அளவில் கான்ஷிராம் இடத்தை நிரப்பிக் கூடிய தலைவராக திருமா இருக்கிறார். ஆறு மாநிலங்களில் விசிக வளர்ந்து வருகிறது. பாசிச சக்திகளால் விலை வைக்க முடியாத ஒரே தலைவராக திருமாவளவன் இருக்கிறார். மேலும் மோடி போன்றோர் ஆட்சியில் திருமா போன்றோர் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
ஸ்டாலினை அச்சுறுத்தவே கெஜ்ரிவால் கைது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் மாநில காட்சியாக இருந்த திமுக.வை மு.க.ஸ்டாலின் வந்த பிறகு அகில இந்திய கட்சியாக மாற்றியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காத்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை அச்சுறுத்த வேண்டியே இத்தகைய கைதுகள் நடைபெறுகின்றன. பல்வேறு பிரச்சினைகள் மனவருத்தம் வந்த போதும் கூட்டணி கட்சிகளை கட்டுக்கோப்பாக கொண்டு செல்கிறார் மு.க.ஸ்டாலின்.
இந்தியாக் கூட்டணி இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் மிகவும் ஒற்றுமையாக உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும், மோடி அரசு பெட்ரோல் விலையை குறைக்காமல் உள்ளது. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வருகிறார் என்றார்.
வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்
இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டி முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். திருமாவளவனுக்கு திருமணம் செய்து வைக்க வெண்டுமென அவரது தாயார் என்னிடம் கேட்டார். நான் இதனை கேட்டதற்கு திருமாவளவன் நான் மக்களுக்காக உழைக்கிறேன், மக்களுக்காக வாழ்கிறேன் என்று உறுதியாக பேசினார். தனது வாழ்க்கையையே மக்களுக்காக முழுமையாக அளித்தவர் திருமாவளவன் என தொழிலளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருமாவின் வெற்றி காலத்தின் கட்டாயம்
எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்குக் உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக மோடி உள்ளார். திருமாவளவனின் வெற்றி என்பது காலத்தின் கட்டாயம், வரலாற்று கடமை. அவர் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கு தொடர்ந்து போராடி வருகிறார். சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது திருமாவளவனுக்கு பெருமையல்ல, அவர் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது தொகுதிக்கு பெருமை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கொள்கை வீரன் திருமா
உங்களுக்காக திருமாவளவன் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார், அவரை வெற்றி பெற வைக்க நீங்கள் உழைக்க வேண்டும். சென்னையில் உள்ள எங்கள் வீட்டில் தான் பானை சின்னத்தை உருவாக்கினோம். யார் அதிக வாக்கு வாங்குவார்கள் என்று சிவசங்கர் நமக்கு சவால் விட்டுள்ளார், உங்களை நம்பி நான் சவாலை ஏற்கிறேன்.
சிலர் காலையில் ஒரு கூட்டணி, மாலையில் ஒரு கூட்டணியில் பேசி வருகின்றனர். இவர்களை சமூக நீதி காவலர் என்று சொல்ல முடியுமா? இன்று பணத்திற்காக கூட்டணி வைக்கின்றனர். எடப்பாடி நான்கு ஆண்டு கல்லாக் கட்டி விட்டு இன்று கட்சிகளை விலைக்கு வாங்குகின்றனர். திருமாவளவன் கொள்கை வீரன். பணத்திற்காக கூட்டணி கைக்காதவர். நாம் அமைதியாக வாழ நாடாளுமன்ற உறுப்பினர் உழைக்கின்றார். அவரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஒற்றை நம்பிக்கை ராகுல் காந்தி
இறுதியாக விழா நாயகனும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் பன்னீர்செல்வம் நாம் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இரண்டு அமைச்சர்களும் பல நெருக்கடிகளை சந்தித்து நமக்காக பணியாற்றினார்கள். அடுத்த 22 நாட்கள் கடலூர் விசிக உறுப்பினர்கள் திமுக கூட்டணியினரின் வழிகாட்டுதலில் பணியாற்ற வேண்டும். நானும் அதனை அப்படியே பின்பற்றுவேன்.
சமூகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு காரணமாக இருப்பது கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் தான். நான் என்றும் தனிப்பட்ட நபர்களை பழித்து பேசியதல்ல, ஆனால் பாஜக இன்று அவர்களுக்கு எதிராக பேசினால் இந்துக்களுக்கு எதிராக பேசினார் என்று திரித்து பேசுகின்றனர். எந்த காலத்திலும் திருமாவளவன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதில்லை. அண்ணாமலை பேசியது போல சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக நான் இருந்தது இல்லை.
அதிமுக திராவிட அடையாளத்துடன் நின்ற கட்சி. பாஜக உடன் கூட்டணி வைக்கும் கட்சி நீர்த்து போகும். நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக சென்றவுடன் நான் செய்த முதல் மனு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை உயர்த்தியது தான். பிற்படுத்தப்பட்டோரின் மருத்துவ இடங்களை பெற விசிக வும் ஒரு காரணம். எந்த காலத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நான் ஒருநாளும் செயல்பட்டதில்லை. செயல்படப்போவதும் இல்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி பாஜக தமிழகத்தை பொறுத்தவரை ஜீரோ தான். இந்தியாவின் ஒற்றை நம்பிக்கையாக ராகுல் காந்தி இருப்பதாக தெரிவித்தார்.