கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மது வாங்க செல்லும் போது இருசக்கர வாகனம்பாதியில் நின்றதால் ஆத்திரமடைந்த மது பிரியர் தனது இருசக்கர வாகனத்தை சாலையிலேயே தீ வைத்து கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் மதுகுடிக்க டாஸ்மாக் கடைக்கு சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னார்கோவில் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இரண்டு சக்கர வாகனம் பாதி வழியில் வீரநத்தம் என்ற இடத்தில் நின்றுள்ளது.
இதனால் எரிச்சலடைந்த மணிகண்டன் கோபத்துடன் தனது இருசக்கர வாகனத்தை மீண்டும் இயக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வாகனம் மீண்டும் ஆனாகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது வாகனத்தில் இருந்து பெட்ரோரை எடுத்து வாகனத்தின் மீது தெளித்து இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். சிலர் மணிகண்டனை படம் எடுக்க முற்பட்டபோது அவர் அவ்விடத்தில் இருந்து நைசாக நழுவி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து கருகியது மது பிரியர் மணிகண்டன் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.