
மதன், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதாக கூறி சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்த மதன் என்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மதனின் ஆபாச பேச்சு குறித்து யூ-டியூப்பர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புளியந்தோப்பில் உள்ள சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும் படி காவல்துறை உத்தரவிட்ட நிலையில், மதன் தலைமறைவானார். எனவே தலைமறைவாக உள்ள மதனை தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் அந்த நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் மதன் ஓபி மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். சேலத்தில் மதன் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து அங்கு சென்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலத்தில் இருந்து மதனின் மனைவி கிருத்திகா மற்றும் அவரது தந்தையை சென்னை அழைத்து வந்த போலீசார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மதன் நடத்தி வரும் யூ-டியூப் சேனலின் அட்மினாக கிருத்திகா செயல்பட்டதும், மதன் பேசிய ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றுவதும் கிருத்திகா தான் என்பது தெரிய வந்துள்ளது. எனவே கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மதனின் ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களால் மாதம் 7 லட்சம் வரை சம்பாதித்து வந்ததாகவும், அதன் மூலம் 2 BMW கார்கள், சென்னையில் இரு சொந்த வீடுகள் ஆகியவற்றையும் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பப்ஜி மதன் வீடியோ இடையில் வரும் பெண் குரலும் கிருத்திகாவுடையது தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுவரை மதனின் அடையாளம் மறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன், மனைவியின் போட்டோவும் வெளியாகியுள்ளது.