இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற ரவுடி கும்பல்! போலீசை கண்டதும் எஸ்கேப்பான போது கை முறிவு!

By vinoth kumarFirst Published May 5, 2024, 7:45 AM IST
Highlights

பாதிக்கப்பட்ட இருவரும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். 

கூடுவாஞ்சேரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்ற போது விபத்தில் மூவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சார்ந்த தமிழ்செல்வன் மற்றும் வல்லாஞ்சேரி பகுதியை சார்ந்தவர் செல்வம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது ஜெப்யீம் நகர் சிவன் கோவில் அருகில் குளக்கரை பின்புறம் அருகில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஜெய்பீம் நகரை சார்ந்த  சதீஷ், லட்சா (எ) லட்சுமணன், குண்டு வினோத்(எ)வினோத்குமார், பிரகாஷ் மற்றும் வினோத்குமார் ஆகிய 5 நபர்களும் மது போதையில் தமிழ்செல்வன் மற்றும் செல்வம் ஆகியோரை வழிமறித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி  கத்தி, கட்டை மற்றும் கல்லை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்செல்வன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். 

இந்நிலையில், நேற்று இரவு கூடுவாஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் வந்த வேகத்தில் வாகனத்தை திருப்பியதில் சதிஷ், குண்டு வினோத் (எ) வினோத்குமார், லட்சா ( எ) லட்சுமணன் ஆகிய மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை மீட்ட காவல்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவரையும் கைது செய்து 5 நபர்களையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!