
Magalir Urimai Thogai Scheme: தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தற்போதைய நிலையில், 1 கோடியே 14 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற்று வந்தனர். ஆனால் 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 25 லட்சம் பெண்கள் உரிமைத்தொகையை பெற முடியவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைய வேண்டியதிருந்தது. மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம்
''மகளிர் உரிமைத் தொகை வேண்டி ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியானவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் விண்ணப்பப் படிவம் பெறப்பட்டு அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூறியிருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் வருகிற 4ம் தேதி முதல் இதற்காக 9000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும் கூடுதலாக 15 லட்சம் பேர் வரை இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக், மொபைல் எண் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.