முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா..!

By Manikandan S R SFirst Published May 7, 2020, 9:25 AM IST
Highlights

சென்னையில் பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று இதுவரை இல்லாத அளவை எட்டியிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 771 பேருக்கு தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1,516 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 35 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியாகி 2,238 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் சென்றிருந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. முதல்வர் வீட்டில் பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

click me!