தவறான சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..! தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொடூரம்..!

By Manikandan S R SFirst Published Nov 29, 2019, 3:15 PM IST
Highlights

நினைவிழந்து கிடந்த மகளை பார்த்து பதறிய அவரது தாய், ஜெயின் மருத்துவமனையில் இருந்தவர்களின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனாலும் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியிருக்கின்றனர்.
 

சென்னை பல்லாவரம் அருகே இருக்கும் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் நித்யா என்கிற லிபியா(21). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. இருமலும் வாந்தியும் அதிகமாக இருந்ததால் அங்கிருக்கும் ஜெயம் கிளினிக் என்கிற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு நித்யாவை பரிசோதித்த மருத்துவர், ஊசி போட்டுள்ளார். இருமலுக்காக சென்ற நித்யாவிற்கு கையில் நரம்பு ஊசி போடப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

ஊசி போட்ட சிறிது நேரத்தில் நித்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், செய்வதறியாது திகைத்தார். உடனடியாக அருகே இருக்கும் ஜெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் ஜெயின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். நினைவிழந்து கிடந்த மகளை பார்த்து பதறிய அவரது தாய், ஜெயின் மருத்துவமனையில் இருந்தவர்களின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நித்யாவை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நித்யா அரை மணி நேரத்திற்கு முன்பவாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்ட அவரது தாய் கதறி துடித்தார். தகவலறிந்து நித்யாவின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் மருத்துவமனைக்கு திரண்டனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீதும், சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அனகாபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.. 

click me!