
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைஇருக்குமா, டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா, மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு 700 கிமீ தெற்கே தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இத்தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, மெதுவாக வடக்கே-வடகிழக்கே நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை, சென்னைக்கு எத்தனை நாட்களுக்கு மழை, மழைஎத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான், ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேகப்பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தென் மாவட்டங்களுக்கு காற்றழுத்த தாழ்வுநிலையால் மழை கிடைக்குமா?
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தென் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் கடற்பகுதி மாவட்டங்களுக்கு மழை இருக்காது.
தென்மாவட்டங்களுக்கு ஏன் மழை கிடைக்கவில்லை?
மேற்குத் திசையிலிருந்து வரும் “வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்” காரணமாகவே மழை தாமதமாக வருகிறது. மேற்குதிசை காற்று இல்லாமல் இருந்தால், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டா பகுதிக்குள் புகுந்து மன்னாள் வளைகுடா வழியாக தென் மாவட்டங்களுக்கு மழையைக் கொடுத்து புறப்படும் என்பதுபோன்றுதான் தோற்றம் இருந்தது.
ஆனால், மேற்கு திசையிலிருந்து வரும் காற்று, டெல்டா பகுதிக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியை செல்லவிடாமல் தடுத்து தள்ளுவதால்தான் தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்கவில்லை.
தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பிருக்கிறதா?
தென் மாவட்டங்களுக்கும், உள்மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. எப்போதென்றால், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வுமண்டலமாகி, தீவிரமடைந்து கரையைக் கடந்து சென்றபின், மழையை எதிர்பார்க்கலாம். மே.தொடர்ச்சி மாவட்டங்ளுக்கும் கூட மழை கிடைக்கும். ஆனால், 5,6,7 தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில்தான் மழைக்கு வாய்ப்பு அதிகம்.
விவசாயிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?
இந்த குறைந்தகாற்றழுத்தப் பகுதி டெல்டா பகுதிக்கு மேலே இருப்பதால் டெல்டா விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்பது முதல்கட்டக் கணிப்பு. வழக்கமாக குறைந்தகாற்றழுத்த தாழ்வுபகுதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும். இதுவும் அதுபோல் நகரும் நகரும்போது, மேற்கிருந்து வரும் காற்றால், இடையூறு ஏற்பட்டு, டெல்டாவுக்குள் செல்லாமல், சென்னைக்கு அருகே கரையைக் கடக்கிறது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். வடகடலோர மாவட்டங்களான சென்னை முதல் கடலூர் வரை கன முதல் மிககனமழை பதிவாகும்.
கரையைக் கடக்கும்போது பாதிப்புகள் அதிகமாக இருக்குமா?
இது அதிதீவிரப்புயல் இல்லை. காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பதால், கரையைக் கடக்கும்போது பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்காது, காற்றும் பயப்படும் அளவில் இருக்காது.தீவிரமான மழையைக் கொடுக்கும். மழைதான் அச்சுறுத்தலாக இருக்கும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லமா?
கடலுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிவிட்டதால், கடல் சீற்றமாகவே இருக்கும். ஆதலால், இன்றிலிருந்து 8ம் தேதிவரை வடகடலோர மாவட்ட மீனவர்கள் முதல்நெல்லூர் கடற்கரை மீனவர்கள் வரை கடலுக்குள் செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது.
மார்ச் மாதத்தில் மழை இருக்குமா இந்த மழை இயல்புக்கு மாறானதா?
மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சராசரி மழையே 2 செ.மீ.தான். ஆனால், 1984, 2008ம் ஆண்டுகளில் மட்டும்தான் 16 செ.மீ மழை பெய்தது. பொதுவாக மார்ச் மாத இறுதியில் மேங்கோ ஷவர்ஸ் எனச் சொல்லப்படும் வெப்பச்சலனமழை இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியினாலும் இதற்கு முன் மழை கிடைத்திருக்கிறது. ஆனால், வடகடலோர மாவட்டங்களுக்கு மழை கிடைப்பது அரிது. அந்தவகையில் இந்த மழை சிறப்பானதுதான்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்