கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 23, 2021, 4:22 PM IST
Highlights

கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன் லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கிராமபுற அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக வேலைக்கு செல்வதாகவும், அதை தடுக்க கிராமப்புறங்களில் ஒவ்வொரு தெருக்களிலும், மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக ஆன்லைன் டிஜிட்டல் ஏற்பாடுகளை மேற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நியமித்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய  மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
 

click me!