வேலையின்றி பரிதவிக்கும் எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்கள்

By Asianet TamilFirst Published Jul 28, 2019, 7:20 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்பை முடித்தவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை உருவாக்காததால் மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேர் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்பை முடித்தவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை உருவாக்காததால் மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேர் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தனியார் பன்னோக்கு மருத்துவமனைகளுக்கு ஈடான நிலையை எட்டி வருகின்றன. தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஒவ்வொரு துறையிலும் சம்பந்தப்பட்ட துறையின் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அதற்கான தகுதிவாய்ந்தவர்கள் இல்லாத நிலையும் காணப்பட்டது.

இதனை தவிர்க்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், எம்.எஸ்., எம்.டி போன்ற மருத்துவ இளங்கலை, முதுநிலை படிப்புகளை தவிர மருத்துவம் சார்ந்த பணிகளுக்கும் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும் வகையில் லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன், ஸ்கேன் தொழில்நுட்ப வல்லுனர் என ஏற்கனவே இருந்த படிப்புகளை தவிர மயக்கவியல், டயாலிசிஸ், ஆர்த்தோ டெக்னீசியன், அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர், இசிஜி, இஇஜி என பல்வேறு மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் அகில இந்திய மருத்துவக்கவுன்சிலின் அனுமதியுடன் கடந்த 2005ம் ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. இப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தகுதியாக பிளஸ்2 அறிவியல் பாடப்பிரிவுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதன் மூலம் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் வழங்கப்படும் சிகிச்சையின் தரம் உறுதி செய்யப்படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், இதில் ஒன்றரை ஆண்டுகால எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் என்ற அவசரகால சிகிச்சைக்கான தொழில்நுட்ப வல்லுனர் ஒன்றரை ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியின்றி தவித்து வருவதாக வேதனை குரல் எழுந்துள்ளது. தற்போது வரை மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேர் வரை இப்படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

இப்படிப்பை முடித்தவர்களை அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். விபத்தில் சிக்கி வருபவர்கள், மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பக்கால பிரச்னைகள் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு மருத்துவர் இல்லாமலேயே உரிய முதலுதவி சிகிச்சையை வழங்கி அவர்களை காப்பாற்றும் வகையில் இவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளை புதிதாக அறிமுகம் செய்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அதற்கான பணியிடங்களை உருவாக்கி முறையான அரசாணை பிறப்பிக்கவில்லை என்பதே எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்பை முடித்தவர்களின் ஆதங்கம். ஏற்கனவே அனஸ்தீசியா, டயாபடீஸ், ஆர்த்தோ, அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு அப்படிப்புகளை முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நல்ல ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால், எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்பை முடித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கூட வேலைவாய்ப்பை வழங்க தயங்குகின்றனர். இதனால் தங்களுக்கான பணியிடங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டு இவர்கள் தரப்பில் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர், மருத்துவக்கல்வி இயக்குனரகம், மருத்துவப்பணிகள் இயக்குனரகம், சுகாதாரப்பணிகள் இயக்குனரகம், மாவட்ட கலெக்டர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் என கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை அதுதொடர்பான முறையான எந்த அசைவும் அரசிடம் இருந்து இல்லை என்பதே எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்களின் வேதனை குரல்.

எனவே, எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதற்கான பணியிடங்களை உருவாக்கித்தர வேண்டும் என்று அப்படிப்பை முடித்த 3 ஆயிரம் பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

click me!