
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, கால் டாக்ஸி, ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் காலை நேரங்களில் வழக்கம் போல் பகல் 12 மணிக்கே திறக்கப்படும் என்றும், இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 9 மணிக்கே மூடப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.