தமிழகம், புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வர இதுவே காரணம்... பாராட்டிய உயர் நீதிமன்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 8, 2021, 10:34 AM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பூசி மற்றும் மருந்துகள் ஒதுக்கும்பணி சரியான பாதையில் செல்வதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொரொனா பரவலின் இரண்டாவது அலை கட்டுக்குள் இருப்பதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, இரண்டாவது அலை பரவ தொடங்கிய நாட்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், பின்னாட்களில் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளே தற்போது கட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை ஒதுக்கும் பணி தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இது தொடர வேண்டுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பல நாடுகள் விலக்கி வரும் நிலையில், கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், சிறுபயணமாக இந்தியா வந்து திரும்புபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தெரிவிப்பதற்காக வழக்கை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

click me!