ஆந்திராவை தமிழகம் எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

By Asianet TamilFirst Published Jul 24, 2019, 1:33 AM IST
Highlights

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேலூர் மாவட்டத்தை ஒட்டிய ஆந்திராவில் பாலாறு கிராமத்திற்கு அருகில் கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை இப்போதுள்ள 22 அடியிலிருந்து 40 அடியாக உயர்த்தும் பணிகளை ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இந்த பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தடுப்பணையை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் அணைக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்வாரி அதிக அளவு நீரை தேக்கும் நடவடிக்கைகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது.

கங்குந்தி பகுதியில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு, தமிழக அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன் ஏழரை அடி உயரத்தில் தடுப்பணை கட்டிய ஆந்திரா, கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அணையின் உயரத்தை 22 அடியாக உயர்த்தியது. இப்போது அடுத்தகட்டமாக 40 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கர்நாடகத்தில் உருவாகி தமிழகம் வரும் பாலாறு ஆந்திரத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாய்கிறது. ஆனால், அந்த 33 கி.மீ தொலைவுக்குள் 21 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியிருக்கிறது. அவ்வாறு கட்டப்பட்டுள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தையும் உயர்த்த ஆந்திரம் திட்டமிட்டிருக்கிறது. இது உண்மையாக இருந்தால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு மிகப்பெரிய தீங்காக அமைந்து விடும்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாத தொடக்கத்திலோ பாலாறு தடுப்பணை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது உச்ச நீதிமன்ற அவமதிப்பதாகும். ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும், ஆந்திராவை எச்சரிக்க ேவண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!