மே 18 முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published May 15, 2020, 3:53 PM IST
Highlights

வரும் 18ம் தேதி(திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் இயங்கும்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இதுவரை 9674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்குள் வந்திருப்பதும் தமிழகத்திற்கு ஆறுதல்.

கொரோனாவை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை(17ம் தேதி) முடிவடைகிறது. தற்போது அமலில் இருக்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் மற்றும் தனிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

ஆனால் அரசு அலுவலகங்கள் ஊரடங்கு காலத்தில்(தற்போதுவரை) செயல்படவில்லை. இந்நிலையில், வரும் 18ம் தேதி(திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலங்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் விதமாக ஊழியர்களை இரண்டு பிரிவாக பிரித்து, இரண்டு நாட்களுக்கு ஒரு குழு வீதம் சுழற்சி முறையில் பணி செய்யுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், 6 நாட்களும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பேருந்து வசதி ஏற்படுத்தித்தரப்படும் என்ற உறுதியையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சுமார் 2 மாதங்களாக அரசு அலுவலகங்கள் செயல்படாததால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே இன்னும் தாமத்தித்தால், அது அரசு ஊழியர்கள் மீதான பணிச்சுமையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதனால் அரசின் இந்த முடிவை அரசு ஊழியர்கள் வரவேற்கவே செய்கின்றனர்.
 

click me!