10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published May 15, 2020, 2:00 PM IST
Highlights

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன்1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன்1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 1 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொது தேர்வை எழுதுவர். பள்ளிகளில், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம். மாணவர்களுக்கு வயது முதிர்ச்சி கிடையாது. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால், வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும், வைரஸ் தொற்றால், பல பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஏற்கனவே கஷ்டமான சூழ்நிலையில் இருப்பர். அவர்களால் தொடர்ந்து படித்து, தேர்வு எழுதுவது கடினம். பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலே இருக்கும். சி.பி.எஸ்.இ., தேர்வு கூட,ஜூலை, 1ம் தேதிக்கு தான் தொடங்கும் என அறிவித்துள்ளனர். எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புஷ்பா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கால தாமதாகத்தான் இந்த தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளளோம் என கூறினர். மேலும், மனுதாரர் தரப்பில் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது.  இதையெல்லாம் கேட்ட நீதிபதிகள் ஏற்கனவே நடப்பு கல்வியாண்டு தள்ளி போய் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக பெற்றோர், ஆசிரியர் சங்கமோ, ஜாக்டோ ஜியோ சங்கமோ நீதிமன்றத்தை நாடவில்லை. மேலும், மாணவர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் யாரும் இதுவரை வழக்கு தொடரவில்லை. ஆனால், எந்த பாதிப்பும் இல்லாத ஒரு நபர் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  இதனையடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றதன் அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!