மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் 10 தடைகள்.. தமிழக அரசு அதிரடி

By karthikeyan VFirst Published May 17, 2020, 3:54 PM IST
Highlights

தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 25 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில செயல்பாடுகளுக்கான தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
 

கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட மூன்றாம்கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நான்காம் கட்ட பொதுமுடக்கம், இதுவரை இருந்த மாதிரி இல்லாமல் வித்தியாசமானதாகவும் நிறைய தளர்வுகளுடனும் இருக்கும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

அந்தவகையில், தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள 25 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும். புதிதாக எந்த தளர்வும் இல்லை.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 25 மாவட்டங்களுக்கும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் 10 செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சிநிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். 

2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடுமற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (bar),உடற்பயிற்சிக்கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல்பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள்,விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டஅரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு,பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள்,கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்துபோக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில்போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிறபகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்குஅனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதிபெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்துபோக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா.

7. மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.

8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும்ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

10. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்  என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

click me!