தமிழிலும் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு - வரலாற்றில் முதல்முறை

By Asianet TamilFirst Published Jul 23, 2019, 11:52 PM IST
Highlights

இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழிலும் மொழிமாற்றம் செய்து அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழிலும் மொழிமாற்றம் செய்து அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் ஆங்கிலம் அல்லது அந்தந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் மட்டும்தான் வழக்கின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் நீதிமன்ற தீர்ப்புகள் அதிகம் வழங்கப்படுவது கிடையாது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இனி வரும் வழக்கின் தீர்ப்புகளை இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், ஒடியா ஆகிய 6 மொழிகளில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, மொழிப் பெயர்க்கப்பட்ட தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தின் “இன் ஹவுஸ்”மின்னணு மென்பொருள் பக்கத்தில் பதிவு செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதியும் வழங்கினார்.

இந்த திட்டத்தின்படி வழக்கின் தீர்ப்புகள் அனைத்தும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்குள் 6 மொழிகளிலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவின் கொச்சியில் நடந்த சட்ட வல்லுநர்களின் மாநாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிராந்திய மொழிகளில் தீர்ப்பு வெளியிடுவதன் அவசியம் பற்றி பேசினார். அதனை சுட்டிக்காட்டி, தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்பு வெளியிடும் நடைமுறைக்குப் பதிலாக பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், தென் இந்தியாவை பொறுத்தமட்டில் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தில் தமிழ்மொழி இடம்பெறவில்லை. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானாலும் தமிழ் மொழியில் தீர்ப்புகளை பெறமுடியாத நிலைமை உள்ளது. இதனால் தமிழ்மொழியை நீதிமன்றம் புறக்கணிக்க முடிவு செய்து விட்டதோ என பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வரும் ஏழை, எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கும் நீதிமன்றத்திற்கு தமிழக மக்களின் நிலைமை மட்டும் தெரியாமல் போனது எப்படி என்பது பலரின் கருத்தாகவும் இருந்தது.

இதுகுறித்து, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியும், மொழிமாற்று பட்டியலில் தமிழையும் இணைக்க கோரியும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தமிழக திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள்.

இதையொட்டி உச்ச நீதிமன்றத்தின் புதிய கூடுதல் கட்டிடம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அப்போது கன்னடம், அசாமி உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவரிடம் வழங்கினார்.

இதையடுத்து அதன் மொழி பெயர்ப்பை ஜனாதிபதி வெளியிட்டார். ஆனால் அதில் தமிழ்மொழி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த திட்டம் என்பது சக குடிமக்களும் நீதிமன்ற தீர்ப்புகளை சாதாரணமாக அணுக முடியும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள சுமார் 100 வழக்குகளின் தீர்ப்பின் மொழிமாற்றம் வெளியிடப்படும். இதில் முதலாவதாக 2 வழக்கின் தீர்ப்பு மட்டும் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இணையதள பக்கத்தில் இரண்டு வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக கூறி கடந்த வாரம் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழில் வெளியாகியுள்ளது என்பது தமிழுக்கு கிடைத்த வெற்றி என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!