திடீர் திடீரென்று பள்ளமாகும் சென்னை சாலைகள்.. வாகன ஓட்டிகள் அச்சம்!!

By Asianet TamilFirst Published Sep 11, 2019, 10:55 AM IST
Highlights

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நேற்று சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் பல சுரங்கப் பாதையின் உள்ளே இருக்கும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. கழிவு நீர் செல்லும் வகையிலும் சாலைக்கு கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப் பாதைகள் பாதுகாப்பற்றதாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் திடீர் திடீரென்று சாலைகளில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் தான் நேற்று சென்னை சென்ட்ரல் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை அரசு பொதுமருத்துவமனை இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நேற்று  சுரங்கப்பாதையின் மேலே செல்லும் பூந்தமல்லி சாலையில் பள்ளம் ஏற்படும் வகையில் திடீரென விரிசல் விழுந்தது.

இதை கவனித்த வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த பகுதியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் போடப்பட்டன. சாலையில் விரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து அரசின் சார்பில் ஆய்வு நடந்து வருகிறது.

கடந்த 3 ம் தேதி தான் அண்ணாநகர் சாந்தி காலனியில் 15 அடி ஆழத்திற்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சென்னை சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!