
விநாயகர் சதுர்த்தி அன்று போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியதுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் தமிழகத்தில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் ஆன்மிக கூட்டம், அரசியல் கூட்டம் உள்ளிட்ட பிற கூட்டங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் முக்கியமான விழாக்கள் பக்தர்கள் கூட்டமின்றி தான் நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில், வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழக பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தடையை மீறி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்துவோம் என பாஜக, இந்து முன்னணியினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த காவல் நிலையங்களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ அல்லது ஊர்வலமாக எடுத்துச் சென்றாலோ சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இதுதொடர்பாக கடந்தாண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறு. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபர்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம் என்று கூறியுள்ளார்.