டாஸ்மாக்கிற்கு எதிராக போராட மக்களுக்கு உரிமை உண்டு... சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 16, 2021, 5:11 PM IST
Highlights

போராட்டத்தின் போது கடையின் மீது கல்வீசி தாக்கியதாக கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் நடந்த போராட்டங்கள் ஏராளம். பல பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு  இடங்களில் டாஸ்மாக் கடைகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. அப்படி சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர்  போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது கடையின் மீது கல்வீசி தாக்கியதாக கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த  வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு எனக் கூறி, மனுதாரர் உட்பட 10 பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளார்.

click me!