”கர்மா” எனும் தலைப்பில் சத்குரு எழுதியுள்ள புத்தகம் வரும் ஏப்ரல் மாதம் ஆங்கிலத்தில் வெளிவருகிறது

By Asianet TamilFirst Published Nov 1, 2020, 8:16 PM IST
Highlights

உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவராக திகழும் சத்குரு அவர்கள் ’கர்மா’ எனும் தலைப்பில் எழுதியுள்ள புதிய புத்தகம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது. இந்தியாவில் முதல் பதிப்பில் 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட உள்ளது.
 

சர்வதேச அளவில் முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை உலகம் முழுவதும் பிரசுரிக்க உள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகம் தொடர்பாக நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி உள்ளார். அந்தப் புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளிலும், 18-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இதுவரை, சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தொன்றுதொட்டு ஆன்மீகப் பாரம்பரியத்தில் குருமார்களால் கவனமாக அணுகப்படும் ‘கர்மா’ எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புதிய புத்தகம் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது.

‘கர்மா’ என்பது இந்திய மனங்களில் மிகவும் ஆழமாக வேரூன்றிய ஒரு கருத்தாக மட்டுமல்லாமல், நமது வாழ்வியலிலும் ஒன்றியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கர்மா என்பது தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் விதியாகவே ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றனர். நம் நாட்டில் கர்மா என்ற வார்த்தைக்கு பலரும் பல விதங்களில் எண்ணற்ற விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சத்குரு இந்த புத்தகத்தின் மூலம் வாசகர்களை விதியின் போக்கில் பயணிக்கும் பயணியாக இல்லாமல் தனது விதியை தானே விதிக்கும் விதத்தில், நம்மை நம் வாகனத்தின் ஓட்டுனராக அமர்த்த முற்படுகிறார். கர்மாவை நம் வாழ்வை கட்டுப்படுத்தும் கயிறாக பார்க்காமல், நம் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் ஒரு கருவியாக எப்படி பயன்படுத்த முடியும் என்பதை இதில் தெளிவுப்படுத்தியுள்ளார். சவாலான உலகத்தில் ஒருவர் எப்படி ஆனந்தமாகவும் புத்தியாலியாகவும் வாழமுடியும் என்பதை கூறும் ஒரு கையேடாக இந்தப் புத்தகம் விளங்கும்.

பென்குயின் பதிப்பகம் சத்குரு எழுதிய ‘Death – A inside story’, ‘Inner Engineering – A yogi’s Guide to Joy’ ஆகிய புத்தகங்களை இதற்கு முன்பு பிரசுரித்துள்ளது. இன்னர் இன்ஜினியரிங் புத்தகம் நியூஸ் டைம்ஸ் சிறந்த விற்பனை புத்தகமாகவும் (New York Times Bestseller) டெத் புத்தகம் HT-Nielson Bestseller பட்டியலிலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

click me!