இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஆளும் திமுக தரப்பில் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பிலும், அமைச்சர்கள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக பட்ஜெட்
அதேபோல், நடந்து முடிந்த நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்த போதும் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் எப்போதும் கிடைக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். பட்ஜெட் தாக்கலின் போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.