கட்டிய 3 மாதத்தில் சரிந்து விழுந்த குளத்தை மீண்டும் தயார் செய்யனும்… - கான்ட்ராக்ட்ருக்கு அதிகாரிகள் உத்தரவு

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 12:35 AM IST
Highlights

ரூ.20 லட்சத்தில் கட்டி முடித்து 3 மாதத்தில் சரிந்து விழுந்த குளத்தை, மீண்டும் சீரமைக்க அதிகாரிகள், கான்ட்ராக்டருக்கு உத்தரவிட்டனர்.

ரூ.20 லட்சத்தில் கட்டி முடித்து 3 மாதத்தில் சரிந்து விழுந்த குளத்தை, மீண்டும் சீரமைக்க அதிகாரிகள், கான்ட்ராக்டருக்கு உத்தரவிட்டனர்.

காட்டங்கொளத்தூர் ஒன்றியம் புலிப்பாக்கம் ஊராட்சி, ராஜா குழிப்பேட்டை கிராமத்தில் மகாத்மாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் கடந்த 3 மாதத்துக்கு முன், குளம் சீரமைக்கப்பட்டது. இதனை கலெக்டர் உள்பட மத்திய குழுவினர் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த லேசான மழைக்கே, புதிதாக கட்டியக் குளத்தில் இருந்த கற்கள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், காட்டாக்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, லீமாரோஸ், பொறியாளர்கள் மாரீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று சேதமடைந்த குளத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது, அங்கு வந்த கிராம மக்கள், ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிகளை ஒழுங்காக ஆய்வு செய்யாமல் சென்றதால் குளம் தரமாக இல்லை. அதனால் குளத்தில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்து சரிந்துவிட்டன என கூறி, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள், மீண்டும் குளத்தை புதிதாக சீரமைக்க வேண்டும் என ஒப்பந்ததாருக்கு உத்தரவிட்டனர். பின்னர் தொழிலாளர்கள், சரிந்த குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

click me!