அடுத்து இது தான் நடக்கும்... உலகத்தை அழைக்கப்போகும் பேராபத்து... ராமதாஸ் விடும் ரெட் அலர்ட்!!

By sathish kFirst Published Aug 14, 2019, 12:44 PM IST
Highlights

ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் மனநிலையை தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் மனநிலையை தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும். காலநிலை மாற்றம் காரணமாக 2050-ஆம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. புவிவெப்பநிலை இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை பத்து லட்சத்தில் 415 பங்கு என்பதிலிருந்து 350 பங்காக கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகள் அழிவை நோக்கி செல்வதை தடுக்க முடியாது.

காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் புதிய தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. காலநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும். 2050&ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும். மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்களும், காயங்களும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் மோதல்கள், வன்முறைகள், உள்நாட்டுக் கலகம், போர் போன்றவைக் கூட ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடையோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக்கூடும் என்பன உள்ளிட்ட ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்னடைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. கேரளத்திலும், கர்நாடகத்திலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சியிலும் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் வெப்பநிலையும், வறட்சியும் அதிகரித்திருக்கிறது.

இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான கடமையும், பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் மட்டும் தான் இருப்பதாக நினைக்கக்கூடாது; அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது. பூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப்போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருட்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதை குறைத்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.

ஆனால், இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவு படுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் தான் ஐ.நா. நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மத்திய அரசு நிலையிலிருந்து உள்ளாட்சிகள் வரை இதே பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டும். இக்கோரிக்கையை தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் வலியுறுத்தி வருகிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்தும் இத்தகைய வலியுறுத்தல்கள் வந்தால் தான் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படும்.

எனவே, இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடக்க நிலை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத விஷயம் என்பதால் வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத் தாயகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட உதவ வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

click me!