சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது, நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது, நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை போரூர், குன்றத்தூர், மவுலிவாக்கம், கொரட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெட்கை தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. குறிப்பாக சென்னை திநகர், எழும்பூர், வடபழனி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, அசோக் நகர், அண்ணாநகர் போன்ற இடங்களில் நேற்று இரவு10:30 மணி முதல் விடியற்காலை மூணு மணி வரை மழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகர பகுதி மற்றும் முக்கிய புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மாலை மழை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று இரவு பெய்த கன மழையில் அசோக் நகரில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மாநகரில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மழை சில தினங்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.