
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி அவருக்கு ரூ.32 கோடியே 29 லட்சம் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதம்
அப்போது, அனைத்து விதமான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் பெற்ற பின்னரே குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் முறையான உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் எடுத்துள்ளார். இந்த குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக புகார் அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை சம்மந்தபட்டவர்களிடம் இருந்து வசூலிப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. 100 சதவீத தொகையை வசூலிக்க வேண்டும். அதன்படி கோவை சப்-கலெக்டர் சரியான அபராதம் விதித்துள்ளார்.
பூமித்தாயின் மார்பை அறுத்து
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அந்த துறை கமிஷனரின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிமன்றம் பாராட்டு
எனவே, சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும். மனுதாரரின் குவாரி உரிமம் 2023-ம் ஆண்டே முடிந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை மூலம் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.