தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக் கூடாது... மீறினால் கடும் நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Apr 21, 2020, 12:33 PM IST
Highlights

 தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஊரடங்கு காலத்தில், கல்வி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தக் கோரி மாணவர்களையோ, பெற்றோரையோ வற்புறுத்தக் கூடாது.

ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட் அனைத்து வகையான கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

எனினும், சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்வி மற்றும் இதர கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மேலும், சில பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த கடைசி தேதி ஆகியவற்றை நிர்ணயித்துள்ளதாக  தமிழக அரசுக்கு புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில்,  இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.  அதில், தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஊரடங்கு காலத்தில், கல்வி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தக் கோரி மாணவர்களையோ, பெற்றோரையோ வற்புறுத்தக் கூடாது. அப்படி எச்சரிக்கையை மீறி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

click me!