தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு... விரைவில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு!

By Asianet TamilFirst Published Sep 21, 2019, 7:42 AM IST
Highlights

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பணி மாற்றத்தால் அதிருப்தி அடைந்த தஹில் ரமானி, இடமாற்ற நடவடிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், தனது பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார். 


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பணி மாற்றத்தால் அதிருப்தி அடைந்த தஹில் ரமானி, இடமாற்ற நடவடிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், தனது பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார். இதனால், கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. “தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக செப்டம்பர் 6 அன்று கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலயா தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டுவரும் நிலையில், பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைந்தது.  நீதிபதி காலி பணியிடங்கள் 18 ஆகவும் அதிகரித்தது.

click me!