தாம்பரம் அருகே அதிவேகத்தில் வந்த கார் மோதியதில், தலைமை காவலர் ஒருவர் பலியானார்.
சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் ரமேஷ். அங்கிருக்கும் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து சென்றுள்ளார். இன்று காலை தாம்பரம் சென்றிருந்த அவர், ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்புவதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலையில் கார் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த காவலர் ரமேஷ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ், பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியாக சென்றவர்கள் காரை ஓட்டி வந்த இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காரை ஓட்டிய இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் பெயர் ஆதித்யா(23) என்பதும், கல்லூரி மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தங்க தமிழ் மகன்' ஓ.பி.எஸ்..! அமெரிக்காவில் விருது வாங்கி அதிர வைக்கும் துணை முதல்வர்..!